ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர்மீது சைக்கிள் மோதிய சம்பவம் தொடர்பில் 34 வயது ஆடவரான எட்மண்ட் குவெக் ஜுன் வெய் மீது வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
அக்டோபர் 22ஆம் தேதி காலை 6.20 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பாக, கண்மூடித்தனமாக சைக்கிளை ஓட்டி திருவாட்டி டான் ஜோ ஆன் எனும் அப்பெண் மீது மோதியதாக குவெக் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சைக்கிள் மோதியதால் அந்தப் பெண்ணுக்குத் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அன்றைய தினம் காலை 10.55 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாக வியாழக்கிழமை (டிசம்பர் 26) கூறிய காவல்துறை, அப்பெண்ணுக்கு வலது முழங்கையிலும் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்.
குவெக்கின் வழக்கு ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்காண்டு வரையிலான சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

