தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண் ஆடை அணிந்து கொள்ளையடிக்க முயன்ற ஆடவர் கைது

2 mins read
1e05e6f8-cb0e-484c-a461-08fad7892bdf
கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள்வரை சிறையும் குறைந்தது ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படலாம். - படம்: சிங்கப்பூர் காவல்படை
multi-img1 of 2

லோரோங் 1 தோ பாயோவில் ஆடவர் ஒருவர் பெண் ஆடை அணிந்துகொண்டு கடையில் கொள்ளையடிக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த 38 வயது ஆடவரின் பெயர் முகம்மது அப்தெல்தவ்வாப் ரியாத் அப்தெல்ஹாக். அவர் கையில் கத்தியுடன் கடைக்குள் நுழைந்ததாகவும் அவரைப் பார்த்ததும் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் உதவிக்கு மற்றவர்களை அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடையிலிருந்து எந்தவொரு பொருளையும் திருடாமல் தப்பியோடிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

திங்கட்கிழமை அவர்மீது கொள்ளையடிக்க முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அவருடைய வழக்கு விசாரணை ஜூலை மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து சனிக்கிழமை காலை 8.10 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்தக் கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் அங்கு நடந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அந்தப் பதிவு மற்றும் காவல்துறை கண்காணிப்புப் படக்கருவி பதிவின் உதவியுடன் புகார் அளித்த ஐந்து மணி நேரத்துக்குள் தங்ளின் பகுதி காவல்துறையினர் அந்த ஆடவரை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

அவரிடமிருந்து கறுப்பு நிற நீண்ட ஆடை, தலையங்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

“​பொதுமக்கள் நிதானத்துடன் கொள்ளைச் சம்பவத்தைக் கையாள வேண்டும். சந்தேகிக்கப்படுபவரின் உடல் தோற்றம், தனித்துவமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும். முடிந்தவரை காவல்துறைக்கு விரைவில் தகவல் அளிக்க வேண்டும். வன்செயல் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்ய நாங்கள் அனைத்து முயற்சியையும் எடுப்போம்,” எனக் காவல்துறை தெரிவித்தது.

கொள்ளையடிக்க முயன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால் அப்தெல்ஹாக்கிற்கு ஏழு ஆண்டுகள்வரை சிறையும் குறைந்தது ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்