போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட சிங்கப்பூர் ஆடவர்மீது வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) அன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
பென்னி கீ சூன் சுவான் என்ற 31 வயது ஆடவர் பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையம் அருகே உள்ள தரைவீட்டில் தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அதன்பின்னர் கீ சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) கைது செய்யப்பட்டார்.
கீயிடம் காணொளி வாயிலாக விசாரணை நடத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டது. கீ 2 கிலோகிராம் ‘மெத்தாம்பேட்டமைன்’ கடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆடவர்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
நீதிமன்ற விசாரணையின் போது அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர், கீயை ஒரு வாரக் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆடவரின் கூட்டாளிகளையும் போதைப் பொருள் எங்கிருந்து வாங்கப்படுகிறது என்பதையும் கண்டுபிடிக்க அந்த விசாரணை முக்கியமானது என்று அவர் கூறினார்.
கீ சிங்கப்பூருக்கு வெளியே இருந்தபடி போதைப்பொருள்களை நாட்டிற்கு கடத்தியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 டிசம்பர், 12 பொட்டலங்களில் 2.9 கிலோகிராம் போதைப்பொருள் சிங்கப்பூருக்குள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 2 கிலோகிராம் ‘மெத்’ போதைப்பொருள் இருந்தது என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடத்தப்பட்ட போதைப்பொருள் ஆர்ச்சர்ட் டவரில் உள்ள கடையில் செந்தில் குமார் என்ற நபருக்கு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
அந்தப் பொட்டலங்களை லோ என்பவர் 2020 டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அக்கடைக்கு சென்று எடுத்துக்கொண்டார்.
2020 டிசம்பர், 2022 நவம்பரில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட இரு வேறு சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கீயின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கடத்தல்கள் தொடர்பாக 21 வயது ஆடவரும் 29 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டனர்.
21 வயது ஆடவருக்கு 22 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.
29 வயது ஆடவருக்கு 8 ஆண்டுகள் தண்டனையும் 7 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது.