தமது நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் வாயிலாக $1.5 மில்லியன் பெறுமானமுள்ள மோசடிப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
38 வயது ஹாவ் ஜியான் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமம் இல்லாது பணம் அனுப்பும் சேவையை நடத்தியது ஆகியவை அவற்றில் அடங்கும்.
கீபே டெக் யூகே எனும் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள அதன் வங்கிக் கணக்கில் மோசடிப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக 2020ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பல புகார்கள் செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது.
அந்த நிறுவனம் பிரிட்டனில் நிறுவப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த ஹாவ், நிறுவனத்தில் இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருந்தார் என்று விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விசாரணை தொடங்கியபோது ஹாவ் சிங்கப்பூரில் இல்லை என்றும் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் சிங்கப்பூர் திரும்பியபோது கைது செய்யப்பட்டார் என்றும் அது கூறியது.
கீபே டெக் யூகே நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஹாவ் $1.55 மில்லியன் பெற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. அதன் பிறகு, அப்பணம் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் உள்ள வேறு வங்கிக் கணக்குகளில் போடப்பட்டது.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கீபே டெக் யூகே நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்கு ஒன்றில் $95,978 பெற்றுக்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடிகள் மூலம் அப்பணம் பெறப்பட்டது என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தமது வங்கிக் கணக்கில் இருந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து ஹாவ் தந்த விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று காவல்துறை கூறியது.
அப்பணம் மற்றொருவருக்குச் சொந்தமானது என்றும் மோசடிக் குற்றங்கள் மூலம் அது பெறப்பட்டது என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த மற்றொருவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.