போலிப் படத்தை மூத்த அமைச்சருக்கு அனுப்பிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

போலிப் படத்தை மூத்த அமைச்சருக்கு அனுப்பிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
773c4f6e-1dc6-4bff-90ff-43679f16cec5
ஆண்டி டான் கொக் யோங் என்ற சிங்கப்பூர் ஆடவர் போலிச் செய்தியை அனுப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். - படம்: ‌ஷின் மின்
Google News Preferred Icon

மரினா பே சேன்ட்ஸ் கட்டடம் தீயில் எரிவதைப் போல காட்டும் படம் ஒன்றை மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு அனுப்பிய ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

படத்தை அனுப்பிய 35 வயது ஆண்டி டான் கொக் யோங், அதனுடன் ‘வெடிகுண்டு’ என்ற செய்தியையும் குறிப்பிட்டிருந்தார்.

பலவகைப்பட்ட குற்றங்கள் (பொது ஒழுங்கு, தொல்லை) சட்டத்தின்கீழ் பொய் தகவல் என்று தெரிந்தே அதை அனுப்பிய குற்றத்தை டான் எதிர்நோக்குகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மரினா பே சேன்ட்சில் தீ மூண்டதைப் போல காட்டும் படத்தை ஃபேஸ்புக்கில் டான் கண்டார்.

அது போலி என்று தெரிந்திருந்தும் கைப்பேசியில் அதைப் பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 29ஆம் தேதி, மெசெஞ்சர் வழியாக திரு லீயின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திற்கு டான் அந்தப் படத்தை அனுப்பினார்.

அத்துடன், ‘வெடிகுண்டு… $1,500 பில்லியன்++ நிர்வாக அனுமதி’ போன்ற செய்தியையும் டான் அனுப்பியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திரு லீயின் ஃபேஸ்புக் பக்கத்தின் நிர்வாகி ஒருவர், படத்தையும் அதனுடன் வந்த செய்தியையும் பார்த்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதையடுத்து, பாதுகாப்பை வலுப்படுத்தும்படி மரினா பே சேன்ட்ஸ் நிர்வாகத்திடம் கூறிய காவல்துறை அதிகாரிகள், டானையும் இறுதியில் பிடித்தனர்.

படத்தையும் செய்தியையும் தாமே அனுப்பியதை அவர் ஒப்புக்கொண்டார்.

வெடிகுண்டுப் புரளியைக் கிளப்பியதற்காக டானுக்கு நான்கிலிருந்து எட்டு வாரங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கும்படி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

வெடிகுண்டு தொடர்பான போலிச் செய்திகள் அருவருப்பானவை என்றும் பீதியை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

டானுக்கான தண்டனையைப் பின்னொரு நாளில் நீதிமன்றம் அறிவிப்பதாகக் கூறியது.

போலித் தகவல்கள் என்று தெரிந்தும் அவற்றை அனுப்பிய குற்றத்திற்கு அதிகபட்சம் மூவாண்டு சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்