ஜே டபிள்யூ மெர்ரியட் சிங்கப்பூர் சவுத் பீச் ஹோட்டலின் முற்பகுதியில் (foyer) இருந்த ஆடவர் ஒருவர், மொத்தம் 50,000 வெள்ளி ரொக்கத்தைக் கொண்ட இரண்டு பெட்டிகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
36 வயது லீ யீ வெய் மீது அந்தக் குற்றச்சாட்டு ஏப்ரல் 9ஆம் தேதி விதிக்கப்பட்டது.
அந்த ஹோட்டலில் ஏப்ரல் 5ஆம் தேதி, பிற்பகல் 12.50 மணிக்கு முன்னதாக அந்தச் சிங்கப்பூரர், பணத்தைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
திருமண உபசரிப்பு விழா ஒன்றின்போது இந்தச் சம்பவம் நேர்ந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆயினும், அவர் விருந்தினராக அந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தாரா என்பது தெளிவாக இல்லை.
சம்பந்தப்பட்ட நபர், அந்தப் பெட்டிகளைத் திருடத் திட்டமிட்டிருக்கக்கூடும் என்று காவல்துறை, முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சம்பவத்திற்குப் பிறகு, சந்தேக நபர் தம் ஆடையை மாற்றியதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஏப்ரல் 7ஆம் தேதியின்போது சந்தேக நபரைக் கைது செய்த அதிகாரிகள், அவரிடமிருந்து 3,000 வெள்ளி பணத்தை மீட்டனர்.
திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் லீக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.