தென்கொரியாவின் ஜீஜு நகரிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் 885 அமெரிக்க டாலர் (S$1,195) திருடியதாக ஆடவர் மீது வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) குற்றம் சுமத்தப்பட்டது.
விமானம் பறந்துகொண்டிருந்தபோது பழுப்பு நிற பைக்குள் வைக்கப்பட்டிருந்த பணத்தை சீன நாட்டவரான 30 வயது சாங் யூக்கி திருடியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) காலை 8.40 மணிக்கும் பிற்பகல் 1.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்துக்கு மேல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டி வைக்கும் இடத்தில் தாம் வைத்திருந்த பை மேல் சாங் கை வைத்ததைப் பார்த்ததாக பயணி ஒருவர் கூறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பையில் இருந்த பொருள்களை அப்பெண் சரிபார்த்தபோது அதில் வைக்கபட்டிருந்த அமெரிக்க டாலரைக் காணவில்லை என்பதை அவர் கண்டறிந்தார்.
பணத்தை சாங் திருடியிருக்கக்கூடும் என்று அவர் சந்தேகிக்கப்பட்டார்.
சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் இதுகுறித்து விமான நிலையக் காவல்துறைப் பிரிவு விமானச் சிப்பந்திகளின் உதவியோடு விசாரணை நடத்தியது.
சாங் அமர்ந்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த பெட்டிகள் வைக்கும் இடத்தில் பணம் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சாங்கிற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.