கடனிலிருந்து தப்பிப்பதற்காக நண்பர்களையும் முன்னாள் வாடிக்கையாளர்களையும் ஏமாற்றியதைக் கைக்கடிகாரக் கடை ஊழியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அரியவகை கைக்கடிகாரங்களைப் பெற உதவிசெய்வதாகக் கூறி 33 வயது சோ ஜியன் குன், 14 பேரை ஏமாற்றி கிட்டத்தட்ட $495,000 தொகையைக் கையாடினார்.
2015ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை ‘கோர்டினா வாட்ச்’ கைக்கடிகாரக் கடையில் வேலை செய்த சோ, $22,000 மதிப்புள்ள ரோலெக்ஸ் கோஸ்மோகிராஃப் கைக்கடிகாரங்களையும் $35,800 மதிப்புள்ள பாடெக் பிலிப் கைக்கடிகாரங்களையும் பெற்றுத் தர முடியும் என்று வாடிக்கையாளர்களிடமும் நண்பர்களிடமும் கூறினார்.
ஆனால், உண்மையாக அத்தகைய கைக்கடிகாரங்களை வாங்க சோவிற்கு எந்த உத்தேசமும் இல்லை. மாறாகத் தமது கடனை அடைக்க அவர்களிடம் பொய் சொல்லி சோ பணம் பறித்துள்ளார்.
ஜனவரி 2ஆம் தேதி பாதிக்கப்பட்ட இருவரிடம் $13,000 பணத்தைத் திருப்பிக் கொடுத்த சோ, $306,000 தொகையைக் கையாடிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
பிப்ரவரி 3ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்போது மேலும் 13 குற்றச்சாட்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
2017ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுவரை கோர்டினா வாட்ச் கடையில் வேலை செய்த சோவின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதையடுத்து கடன் பற்று அட்டைகளைப் பெற்ற சோவிடம் ஒரு கட்டத்தில் அத்தகைய ஏழு அட்டைகள் இருந்தன.
அவற்றைக் கொண்டு ஆடம்பரப் பொருள்களை வாங்கியதுடன் வெவ்வேறு வெளிநாட்டுப் பயணங்களை சோ மேற்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
கடனை அடைப்பதற்கான திட்டத்தில் சேர்ந்த சோ, பின் இரண்டு உரிமம் பெற்ற கடன் கொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றார்.
அதிகரிக்கும் கடனைச் சமாளிக்க முடியாமல் சோ மற்றவர்களை ஏமாற்றத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

