விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறி 170,000 வெள்ளிக்கு மேல் மோசடி செய்துள்ளார் கேவின் டான் காங் யீ என்னும் ஆடவர்.
தம்மீது சுமத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டுகளை 30 வயது டான் ஒப்புக்கொண்டார். டான் ஏமாற்றிய தொகையை திருப்பித் தரவில்லை.
அதைத்தொடர்ந்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் 6 மாதச் சிறைத்தண்டனை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) விதிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதி நெருக்கடியில் இருந்த டான், தமது முதலாளிக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மேலுள்ள ஆர்வத்தை அறிந்து கொண்டு மோசடி வேலையில் ஈடுபட்டார்.
‘ரோலெக்ஸ்’ உள்ளிட்ட கைக்கடிகாரங்களின் படங்களை காட்டி அவற்றை தமது மனைவி மூலம் குறைவான விலையில் வாங்க முடியும் என்று முதலாளியிடம் டான் கூறினார்.
டான் சொல்வது உண்மை என்று நினைத்த முதலாளி அவருக்கு மூன்று கைக்கடிகாரங்கள் வாங்க 123,000 வெள்ளி அனுப்பியுள்ளார். அதன்பின்னர் மீண்டும் பணம் அனுப்பினார்.
டான்மீது எப்போது புகார் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் நீதிமன்ற ஆவணங்களில் இல்லை.
மோசடி குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

