லிட்டில் இந்தியாவில் பணிப்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை: ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

லிட்டில் இந்தியாவில் பணிப்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை: ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

3 mins read
வழக்கு விசாரணையில் முன்னிலையான மறுநாளே குற்றத்தை ஒப்புக்கொண்டார்
120a184e-a75f-4350-837b-b27558a2034c
பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தது, காவல்துறை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஷர்வீன் செட்டி எதிர்நோக்கினார். - படம்: சாவ்பாவ்

காவல் அதிகாரி எனப் பொய்கூறி, இல்லப் பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆடவர் ஒருவர் புதன்கிழமை (பிப்ரவரி 4) ஒப்புக்கொண்டார். வழக்கு விசாரணை தொடங்கிய மறுநாளே அவர் மனம் மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மலேசியரான 48 வயது ஷர்வீன் செட்டி, 2022 ஜூலை 11ஆம் தேதி இரவு 8 மணியளவில், லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தின் ‘எஃப்’ வெளிவாயிலில் உள்ள புதருக்குள் 35 வயது இந்தோனீசியப் பணிபெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பில் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையம்.
லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அவர் மீதான இரண்டாவது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டும் காவல் அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்த குற்றமும், பிப்ரவரி 26ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்போது கருத்தில்கொள்ளப்படும்.

வழக்கு விசாரணைக்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அணுகியபோது, தம் கட்சிக்காரர் புதன்கிழமை காலையில்தான் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் முடிவை எடுத்ததாக செட்டியின் வழக்கறிஞர் முகம்மது பைரோஸ் கூறினார். இருப்பினும், சட்ட உரிமையைக் காரணங்காட்டி, அதற்கான காரணத்தை வெளிப்படுத்த அவர் மறுத்துவிட்டார்.

அந்தப் பணிப்பெண் உடனான பாலியல் உறவு, இருதரப்பு சம்மதத்துடன் நடந்ததாகவே தம் கட்சிக்காரர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூறி வந்ததாக திரு பைரோஸ் குறிப்பிட்டார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் தம் மீதான மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடங்கியபோது, செட்டி அவற்றை எதிர்த்து வாதிட்டிருந்தார்.

கேகே மகளிர், சிறார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமை நடந்த அடுத்த நாள் அப்பணிப்பெண்ணைப் பரிசோதனை செய்தார்.

அப்பெண்ணின் உள்ளாடையிலும் தொடையிலும் செட்டியின் மரபணு கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுகாதார அறிவியல் ஆணையத்தைச் சேர்ந்த பகுப்பாய்வாளர் ஒருவர் தெரிவித்தார். அந்த மருத்துவரும் பகுப்பாய்வாளரும் இந்த வழக்கின் சாட்சிகள்.

செட்டி, கடைசியாக எஸ்பிஎஸ் டிரான்சிட்டிற்காக வேலை செய்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த நாளில், லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையம் அருகில் செட்டி, சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

காவல் அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்து பாலியல் வன்கொடுமை

புல்வெளியில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை அவர் பார்த்தார். அப்போது அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களில் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணும் அவரின் காதலரும் அடங்குவர்.

அந்த வெளிநாட்டு ஊழியர்களை அணுகிய செட்டி, தம்மைக் காவல்துறை அதிகாரியாக அடையாளப்படுத்திக்கொண்டு அவர்களிடமிருந்து அடையாள அட்டைகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

மூவர் தங்கள் வேலை அனுமதி அட்டைகளை அவரிடம் தந்தனர்.

தமது சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவைப் பயன்படுத்தி அந்த வேலை அனுமதி அட்டைகளை ஸ்கேன் செய்வதுபோலச் செட்டி நடித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அவரது அடையாள அட்டையை செட்டி கேட்டபோது, வெளிநாட்டுப் பணிப்பெண்ணாகச் சிங்கப்பூரில் பணிபுரிய மனிதவள அமைச்சு ஒப்புதல் அளித்த கடிதத்தை அப்பெண் அவரிடம் தந்தார்.

கைப்பேசியைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு செட்டி அப்பெண்ணிடம் கூறியதாகக் கூறப்பட்டது. அவரிடம் அப்பெண் தமது கைப்பேசியை ஒப்படைத்தார்.

அப்பெண்ணை செட்டி வேண்டுமென்றே அவரின் நண்பர்கள் இருந்த இடத்திலிருந்து விலகி வேறு இடத்துக்கு அழைத்துச் சென்றதாக அறியப்படுகிறது.

அதையடுத்து, அப்பெண்ணைச் செட்டி அருகில் உள்ள புதருக்குள் அழைத்துச் சென்று அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ளத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதலில் மறுப்பு தெரிவித்த அப்பெண், சிங்கப்பூரில் அவரும் அவரின் நண்பர்களும் பணிபுரிய முடியாதபடி செய்துவிடப்போவதாகச் செட்டி மிரட்டல் விடுத்ததும் எதிர்ப்பைக் கைவிட்டார்.

அப்பெண்ணைத் தம்முடன் தகாத செயல்களில் ஈடுபட வைத்த செட்டி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது.

பிறகு, அப்பெண்ணிடம் அவரது கைப்பேசியையும் மனிதவள அமைச்சின் கடிதத்தையும் செட்டி திருப்பிக் கொடுத்தார்.

செட்டி உண்மையான காவல்துறை அதிகாரி அல்லர் என்று அப்பெண் தம் நண்பர்களிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்