ஜூ செங் சாலையில் உள்ள வீடு ஒன்றில் தீ மூட்டிய குற்றத்தை 44 வயது ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த வட்டாரத்தின் புளோக் 14ல் உள்ள வீட்டில், லியூ செயுவென் தீ மூட்டியக் குற்றத்தை எதிர்நோக்குகிறார்.
இவ்வாண்டு மே 4ஆம் தேதி, இரவு 9.40 மணியளவில் வீட்டில் உள்ள வரவேற்பறையில் இரண்டு நிலக்கரித் துண்டுகளை ஈயப் பாத்திரத்தில் வைத்து லியூ அவற்றுக்குத் தீ மூட்டினார்.
அதன்பின், நிலக்கரி இருந்த பாத்திரத்தை அறையில் உள்ள சன்னலுக்கு அருகே வைத்த அவர், கூடுதல் நிலக்கரித் துண்டுகளை அதில் சேர்த்தார். சிறிது நேரத்தில் சன்னலிலிருந்த பிளாஸ்டிக் திரைச்சீலையில் பற்றிய தீ, வீடு முழுவதும் பரவியது.
தீயை அணைக்க லியூ மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பின் அக்கம்பக்கத்தினரை அவர்களின் வீட்டிலிருந்து வெளியேறும்படி கூறிய லியூ, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் அளித்தார்.
லியூவின் மூத்த பெற்றோர் இருவருடன், தீயணைப்பாளர்கள் இருவரும் புளோக்கில் உள்ள குடியிருப்பாளர்கள் சிலரும் புகையைச் சுவாசித்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திங்கட்கிழமை (ஜூன் 22), லியூக்கான கட்டாய சிகிச்சை ஆணை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்கீழ் லியூ, மனநலச் சிகிச்சையைக் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.
தீ விபத்தால் $80,000லிருந்து $100,000வரையிலான சேதம் ஏற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
கைதுசெய்யப்பட்ட லியூ, பின்னர் மனநலக் கழகத்திலும் சேர்க்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் நடந்த சமயத்தில் அவர் மருட்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. தமக்குத் தொல்லை கொடுக்க நினைத்த அண்டைவீட்டார் வீட்டின் கூரைவழியாக ‘லேசர்’ கதிர்களைப் பாய்ச்சியதாக லியூ எண்ணிக்கொண்டார்.
அவர்களின் ‘தாக்குதலை’ முறியடிக்க அவர் நிலக்கரிக்குத் தீ மூட்டியதாகக் கூறப்படுகிறது. லியூவின் தண்டனை ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படும்.

