கடுமையான நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட 71 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, 55 வயது முகம்மது ஸாக்கிர் ஜாஃபர் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 7) ஒப்புக்கொண்டார்.
வழக்கு விவரங்களின்படி, 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழிதெரியாமல் தவித்த அந்த முதியவரைச் சந்தித்த ஸாக்கிரின் மனைவி, அவரது அடையாள அட்டையிலிருந்த முகவரியைச் சரிபார்த்து வீட்டில் கொண்டுபோய்விட்டார்.
அதன் பிறகு, அந்த மூதாட்டி தனியாக வசிப்பதையும் கடுமையான நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஸாக்கிர், அவரது வீட்டிற்கு நள்ளிரவில் சென்று பலமுறை பாலியல் ரீதியான குற்றங்களைப் புரிந்தார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று நடந்த பாலியல் துன்புறுத்தல், மூதாட்டியின் மகன்களால் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
பதிவுகளைக் கண்ட மூதாட்டியின் மகன், ஸாக்கிரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஸாக்கிர் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மூதாட்டி நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உறுதி செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

