இல்லப் பணிப்பெண்ணைக் கத்தியைக் காட்டி மிரட்டிய ஆடவருக்கு 40 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இல்லப் பணிப்பெண் தன் காதலை நிராகரித்ததை அடுத்து 37 வயது முகமது கைருல்னநயிம் ரோஸ்லி கடந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கத்தியைக் காட்டி பணிப்பெண்ணைக் கொலை செய்யப்போவதாக மிரட்டியதை ஒப்புக்கொண்டார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று மாதங்களாக தமது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்மீது காதல் ஏற்பட்டதாக கைருல்நயிம் நீதிமன்றத்தில் கூறினார். அந்தப் பணிப்பெண் கைருல்னாயிம், அவரது மனைவி இரண்டு பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்தார்.
கைருல்நயிமின் நடத்தையால் கலக்கமடைந்த பணிப்பெண் அவரை இன்ஸ்டகிராம், டிக்டாக், வாட்ஸ்அப் ஆகிய அனைத்து சமூக ஊடகங்களிலும் தடை செய்தார்.
அப்படியிருந்தும் பணிப்பெண்மீது காதல் கொண்டிருப்பதாக மனைவியிடம் கூறிய கைருல்நயிம் அவரை கடந்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி மணமுறிவு செய்யப்போவதாகவும் சொன்னார்.
ஜனவர் 12, 2024 அன்று பிற்பகல் நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்த கைருல்நயிம் பணிப்பெண் தமது வாழ்க்கையைக் கெடுத்ததாகக் கூறி சமையலறையிலிருந்து 16 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியைக் கொண்டு பணிப்பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.
சிறிது நேரம் கழித்து பாதுகாப்பு தேடி வீட்டைவிட்டு ஓடிய பணிப்பெண் அருகில் உள்ள புளோக்கின் கீழ்த்தளத்திற்குச் சென்றார்.
வழிப்போக்கரின் உதவியுடன் பணிப்பெண் காவல்துறையிடம் புகாரளித்தார்.

