சன்டெக் சிட்டி மாநாட்டு நிலையத்துக்கு வெளியே ஜூலை 16ஆம் தேதி அதிகாலை் ஏற்பட்ட கார் விபத்தில் 43 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய 38 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அன்று அதிகாலை 12.40 மணியளவில் எண் 1 ராஃபிள்ஸ் பொலிவார்ட் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தின் காரணமாகக் காயமடைந்து மயங்கிக் கிடந்த பாதசாரியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டு டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவருக்குச் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திலிருந்து தப்பிய ஓட்டுநர், பின்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் மரணத்தை விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாகச் செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய்யப்பட்டார்.
மேலும், விபத்துக்குப் பின் வாகனத்தை நிறுத்தத் தவறியது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மாண்டவர், ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள ‘டிஜேடிஹெச் ரேமன்’ உணவகத்தின் பங்குதாரர்களில் ஒருவரான டான் சியாவ் திங்ஃபெங் என்று தெரியவந்துள்ளது.
அவரது மறைவுக்கு அந்த உணவகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் உண்மை நிலவரம் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ஏதேனும் தகவல் அல்லது காணொளிப் பதிவுகள் இருந்தால் காவல்துறையிடம் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

