ஹவ்காங்கில் கார் சறுக்கி ஆடவர் மரணம்

ஹவ்காங்கில் கார் சறுக்கி ஆடவர் மரணம்

படம்: சின்மின்

07 Aug 2026 - 9:32 pm

1 mins read

ஹவ்காங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) நிகழ்ந்த விபத்தில் கார் சறுக்கி விபத்துக்குள்ளானதில் 38 வயது ஓட்டுநர் உயிரிழந்தார்.

அதிகாலை 4.20 மணியளவில் ஹவ்காங் அவென்யூ 10ஐ நோக்கிச் செல்லும் ஹவ்காங் அவென்யூ 6ல் கார் ஒன்று தானாகவே சறுக்கி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் காரின் சிதைவுகளுக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை நீரழுத்த மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்டனர்.

பலத்த காயமடைந்து சுயநினைவிழந்த நிலையில் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சின் மின் சீன நாளிதழ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் கார் ஒன்று பக்கவாட்டில் தலைகீழாகச் சாய்ந்து கிடப்பதும், சுற்றிலும் உதிரிபாகங்கள் சிதறிக் கிடப்பதும் தெரிகிறது.

சிங்கப்பூரில் உயிரிழப்பை ஏற்படுத்தும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 2024ல் 139 ஆக இருந்த நிலையில், 2025ல் 147 ஆக அதிகரித்துள்ளது.

இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விபத்துமரணம்ஹவ்காங்உயிரிழப்பு