உட்லண்ட்ஸில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் 47 வயது ஆடவர் உயிரிழந்தார்.
புக்கிட் தீமா விரைவுச் சாலையில் அந்த விபத்து நிகழ்ந்ததாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) காலை 8.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விரைவுச்சாலையில் உட்லண்ட்ஸ் அவென்யூ 3 வெளிவழிக்கு அப்பால் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு இட்டுச் செல்லும் வழியில் விபத்து நிகழ்ந்ததாக அவை குறிப்பிட்டன.
சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டி உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
விபத்து தொடர்பான விசாரணையில் 42 வயது கார் ஓட்டுநர் உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.
சாலை விபத்துகளில் கடந்த ஆண்டு 136 பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் அது 25.9 விழுக்காடு அதிகம்.
விபத்துகளில் மோட்டார்சைக்கிளோட்டிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மோட்டார்சைக்கிளோட்டிகள் சம்பந்தபட்ட விபத்துகள் கடந்த ஆண்டு 2.8 விழுக்காடு குறைவாகப் பதிவானபோதிலும், மரணமடைந்த மோட்டார்சைக்கிளோட்டிகள் மற்றும் பின்னிருக்கைப் பயணிகளின் எண்ணிக்கை 44.7 விழுக்காடு அதிகரித்தது.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டு 47 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 68 ஆனது.