ஜூன் 16ஆம் தேதி அன்று பாய லேபார் ரோட்டில் 53 வயது நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சறுக்கி மரத்தில் மோதியதில் அவர் மரணமடைந்தார்.
அப்பர் பாய லேபார் ரோட்டை நோக்கிச் செல்லும் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் சுமார் 12.05 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
சுயநினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த ஆடவர் பின்னர் அங்கு மரணமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டோம்ப் செய்தித் தளத்தில் பகிரப்பட்ட படங்களில், கறுப்பு நிற கார் ஒன்று சாலையோர மேடையில் ஏறிய நிலையில் அங்குள்ள மரத்துக்கு அருகில் மோதி நின்றதைப் பார்க்க முடிந்தது.
காரின் முன்பக்க பம்பரும் (Bumper) பயணிகள் பக்கவாட்டுக் கதவும் பலத்த சேதமடைந்துள்ளன.
சாலையில் படுத்துக்கிடக்கும் ஒருவருக்கு அருகில் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இருப்பதையும் காண முடிந்தது.
இது தொடர்பான விசாரணையைக் காவல்துறை தொடங்கியுள்ளது.

