உட்லே ரயில் நிலையத்தில் மயங்கிய ஆடவர்; உயிரைக் காப்பாற்றிய முதலுதவி

உட்லே ரயில் நிலையத்தில் மயங்கிய ஆடவர்; உயிரைக் காப்பாற்றிய முதலுதவி

2 mins read
எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர்களும் பயணிகளும் விரைந்து செயல்பட்டனர்
cfe03ca7-1135-4225-8921-16acdae95ef2
(இடமிருந்து) ரயில் நிலையத் துணை மேலாளர் தங்கவேல் சிவா, நிலைய மேலாளர் எரிக் டான், நிலையத் துணை மேலாளர் ஜோனதன் சிங். - படங்கள்: எஸ்பிஎஸ் டிரான்சிட்
Google News Preferred Icon

உட்லே ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த ஆடவரைக் காப்பாற்ற எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவன ஊழியர்கள் மூவரும் பயணிகளும் உடனடியாகச் செயல்பட்டனர் என்று புதன்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பவம் ஜூன் 27ஆம் தேதி நடந்ததாக அது கூறியது. ரயில் நிலைய ஊழியர்கள் எரிக் டான், ஜொனாதன் சிங் இருவரும் ஆடவர் மயங்கி விழுந்த சில நிமிடங்களில் அவரருகே விரைந்தனர். மற்றொரு பயணி அவசர மருத்துவ உதவி வாகனத்தை அழைக்க உதவினார்.

ஆனால், அந்த ஆடவரின் மூச்சு நின்று நிலைமை மோசமானது. அதைக் கண்ட பெண் பயணி ஒருவர் அவருக்கு உயிர்காக்கும் முதலுதவிச் சிகிச்சை (சிபிஆர்) செய்யத் தொடங்கினார். எரிக் டான் நிலையத்திலிருந்த தானியக்க இதயத் துடிப்பு மீட்டெடுப்புச் சாதனத்தை (ஏஇடி) விரைந்து எடுத்து வந்தார்.

மற்றோர் ஆண் பயணியும் உதவிக்கு வந்த நிலையில், அவர்கள் அந்தச் சாதனத்தைப் பயன்படுத்தினர். அப்போது அங்கு வந்த நிலைய ஊழியர் தங்கவேல் சிவாவும் முதலுதவிச் சிகிச்சையில் இணைந்தார்.

மருத்துவக் குழுவினர் வரும் வரை ஊழியர்களும் பயணிகளும் மாறி மாறி முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். இதனால் அந்த ஆடவர் மீண்டும் மூச்சுவிடத் தொடங்கி, சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.

ஆடவர் பின்னர் தன் உயிரைக் காக்க உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நெருக்கடியான நேரத்தில் நிலைய ஊழியர்களும் பயணிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டதை எஸ்பிஎஸ் டிரான்சிட் பாராட்டியது. உதவி தேவைப்பட்ட ஒருவருக்கு உதவ, எவ்விதத் தயக்கமுமின்றி முன்வந்த அனைவருக்கும் அது நன்றி கூறியது.

குறிப்புச் சொற்கள்
ரயில் நிலையம்ஆடவர்எஸ்பிஎஸ் டிரான்சிட்ஊழியர்கள்பயணிகள்முதலுதவி