பஃப்ளோ சாலை சந்தில், 16 பொட்டலங்கள் மெல்லும் புகையிலை வைத்திருந்ததற்காகச் சென்ற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) இரவு கிட்டத்தட்ட 10.20 மணிக்கு 27 வயது ஆடவர் ஒருவர் பிடிபட்டார்.
துணைக் காவலதிகாரிகளும் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகளும் அவரைப் பிடித்தனர்.
அதன் தொடர்பில் தமிழ் முரசு, சுகாதார அறிவியல் ஆணையத்தைத் தொடர்புகொண்டது.
வேலை அனுமதிச்சீட்டு வைத்திருந்த அந்நபருக்கு அந்த இடத்திலேயே $2,000 வரையிலான அபராதம் விதிக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.
மெல்லும் புகையிலை சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட ஒருவகையான புகையிலாப் புகையிலை. அதிலுள்ள நிக்கோட்டினும் மற்ற அபாயகரமான ரசாயனங்களும் புற்றுநோயையும் வாய்ச் சுகாதாரப் பிரச்சினைகளையும் உண்டாக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
இவ்வகைக் குற்றங்களை ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அவை அதிகம் நடைபெறும் இடங்களில் வழக்கமான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது, வழக்கு தொடுப்பது போன்றவற்றின் மூலம் சட்டவிரோதப் புகையிலை விற்பனையைக் கட்டுப்படுத்துவதாகவும் ஆணையம் கூறியது.
சென்ற ஆண்டு மே 15 முதல் ஜூன் 30 வரை சுகாதார அறிவியல் ஆணையம், காவல்துறையுடன் இணைந்து லிட்டில் இந்தியாவிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது 24 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்ட 27 பேர் புகையிலாப் புகையிலையை விற்றதற்காகவும் வைத்திருந்ததற்காகவும் விசாரிக்கப்பட்டனர். $100,000க்குமேல் மதிக்கத்தக்க ஏறத்தாழ 600 கிலோகிராம் எடையுள்ள புகையிலை அப்போது கைப்பற்றப்பட்டது.
மேலும், மெல்லும் புகையிலையைச் சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற 38 வயது ஆடவர் மீது செப்டம்பர் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
புகையிலை (விளம்பரங்கள், விற்பனைக் கட்டுப்பாடு) சட்டத்தின்படி, புகையிலாப் புகையிலையை இறக்குமதி, விநியோகம், விற்பனை அல்லது விற்பனைக்கான முயற்சி செய்பவர்கள்மீது, முதல் குற்றத்துக்கு அதிகபட்சம் $10,000 அபராதம், அல்லது ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அதைத் தொடர்ந்து புரியும் குற்றங்களுக்கு அதிகபட்சம் $20,000 அபராதம், 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
புகையிலாப் புகையிலை வைத்திருப்பவர், வாங்குபவர் அல்லது பயன்படுத்துபவருக்கு $2,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் புகையிலாப் புகையிலையை வாங்கவோ கொண்டுவரவோ கூடாது எனச் சுகாதார அறிவியல் ஆணையம் மக்களுக்கு நினைவூட்டியது.

