இரு நிறுவனங்களில் இயக்குநர் பொறுப்பில் இருந்த ஆடவர் ஒருவர் $1,000 லஞ்சம் கொடுத்த வழக்கில் அவருக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
விர்ஜில் ஜாய் ஏஞ்சலஸ், 58, எனப்படும் அவர், குற்றத்தில் ஈடுபட்டபோது இஇஸட் ஏவியேஷன் (EZ Aviation), இஇஸட் டெக்னாலஜி (EZ Technology) நிறுவனங்களில் பணியாற்றினார்.
சேட்ஸ் (SATS) நிறுவனத்தின் பரமரிப்புப் பிரிவில் பயிற்சி, தரம் மற்றும் திட்ட நிர்வாகியாக இருந்த லியோங் போ கியோங், 39, என்பவருக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்தை விர்ஜில் ஒப்புக்கொண்டார்.
விர்ஜில் போலவே டொமினிக் குவெக் சுன் ஹுவா, லிம் பான் ஹாக் ஆகியோரும் தனித்தனிச் சம்பவங்களில் லியோங்கிற்கு லஞ்சம் கொடுத்தனர்.
குவெக்கிற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் $30,000 அபராதம் விதிக்கப்பட்டது. லிம்முக்கு இவ்வாண்டு பிப்ரவரியில் இரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
விமான நிலைய தரைத்தளப் பிரிவுக்குத் தேவைப்படும் கருவிகளை சேட்ஸ் பராமரிப்பு நிலையம் கையாள்கிறது.
அதன் ஏலக்குத்தகை மதிப்பீட்டுக் குழுவில் இருந்த லியோங், ஏலக்குத்தகையில் பங்கேற்கும் விநியோகிப்பாளர்களின் விருப்பங்களைக் குறிப்பெடுக்கும் பொறுப்பில் இருந்தார்.
ஏலக்குத்தகைக்குத் தகுதிபெறுவோரிடமும் குழுவின் உறுப்பினர்களிடமும் அவர் தொடர்பில் இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
2016க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் இஇஸட் டெக்னாலஜி நிறுவனத்திற்கு சேட்ஸ் நிறுவனம் குத்தகை ஒன்றை வழங்கியது.
பின்னர், 2019க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் தமக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் $1,000 கடனாகத் தருமாறு விர்ஜில்லிடம் லியோங் கேட்டிருந்தார்.
சேட்ஸ் நிறுவனத்தில் லியோங்கின் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு அந்தப் பணத்தை அவர் லஞ்சமாகக் கொடுத்தார்.
லியோங் மீதான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவம் எவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது என்ற விவரம் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.

