கட்டுமானத் திட்டங்களைக் கையாளும் ஒரு நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு, கையூட்டு பெற்றதற்காக திங்கட்கிழமை (நவம்பர் 18) $56,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தக் கட்டுமான நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரிடமிருந்து $27,000க்கும் அதிகமான கடனைப் பெற்றதும் அதில் அடங்கும்.
லீ யுவெட் ஹெங், 74, அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 112 நாள்கள் சிறையில் இருக்கவேண்டும். 2014ஆம் ஆண்டில் அந்தக் குற்றச்செயல்கள் நடந்தபோது, சிங்கப்பூரரான லீ, ‘ஹைட்ரோகெம்’ (Hydrochem) எனும் நிறுவனத்தில் துணைத் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
‘ஹைட்ரோகெம்’, நீர் சுத்திகரிப்பு நிறுவனமான ‘ஹைஃபிளக்ஸ்’க்குச் (Hyflux) சொந்தமானது.
‘ஹைட்ரோகெம்’ நிறுவனத்துடன் வர்த்தக ரீதியான நலன்களை முன்னெடுத்துச்செல்ல, ‘ஸெங்டா கார்ப்’ நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநரான சீனாவைச் சேர்ந்த லி ஹொங்டா என்பவரிடமிருந்து லீ கையூட்டு பெற்றிருந்தார்.
லீ, ஆகஸ்ட் 21ஆம் தேதி இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
‘ஹைட்ரோகெம்’ நிறுவனம், ‘ஹைஃபிளக்ஸ்’ நிறுவனத்தின் கட்டுமானத் திட்டங்களைக் கையாண்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் சூரியபிரகாஷ் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டில், கான்கிரீட் வேலைகளுக்கான பொருள்கள், சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ‘ஹைட்ரோகெம்’ நிறுவனம், ‘ஸெங்டா’ நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்னர், அப்போது 59 வயதான லி ஹொங்டாவிற்கு $38,000 அபராதம் விதிக்கப்பட்டது.


