ஆஸ்திரேலியக் குடிமகனான பிறகும் சிங்கப்பூர் குடியுரிமையைக் கைவிடாத ஆடவருக்குச் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது தனது சிங்கப்பூர்க் கடப்பிதழை அதிகாரிகளிடம் காண்பிக்கத் தவறியதற்காக $2,400 அபராதம் விதிக்கப்பட்டது.
69 வயது தியோ டிக் யோங் ஜெரோம் லியோனார்டுக்கு நவம்பர் 12ஆம் தேதி இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
குடிநுழைவுச் சோதனைச்சாவடியில் சோதனைக்காகத் தியோவின் சிங்கப்பூர் கடப்பிதழை அதிகாரிகள் கேட்டபோது அவர் அதைக் காண்பிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது.
அக்குற்றத்திற்காக அவர்மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
2000ஆம் ஆண்டு வேலை தேடி தியோ ஆஸ்திரேலியா சென்றதாகவும் 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் ஆஸ்திரேலியக் குடிமகன் ஆனதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
2008, 2009ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் வந்தபோது சாங்கி விமான நிலையத்தில் குடிநுழைவுச் சோதனையின்போது அவர் தனது ஆஸ்திரேலியக் கடப்பிதழைக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது.
2008ஆம் ஆண்டு சிங்கப்பூர் சொகுசுக் கப்பல் நிலையம் வந்தபோதுகூட அவர் தமது ஆஸ்திரேலியக் கடப்பிதழைத்தான் அதிகாரிகளிடம் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டு அக்டோபர் 27ஆம் தேதி குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தியோ, நீதிமன்றத்தில் செலுத்திவிட்டார்.

