பூன் கெங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் 66 வயது ஆடவர் ஒருவர் மாண்டு கிடந்தார்.
புளோக் 4 பூன் கெங் சாலையில் அமைந்துள்ள அவ்வீட்டில் அந்த ஆடவர் தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அது குறித்து அந்த ஆடவரின் அண்டைவீட்டுக்காரர்கள் புகார் அளித்தனர்.
ஜனவரி 5ஆம் தேதி பிற்பகல் 1.05 மணி அளவில் இதுகுறித்து புகார் கிடைத்ததாக மதர்ஷிப் செய்தித்தளத்திடம் காவல்துறை தெரிவித்தது.
இதை இயற்கைக்கு மாறான மரணம் என்று அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் அந்த வீட்டிற்குள் நுழைந்தபோது அந்த ஆடவர் சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் மாண்டுவிட்டதாக அவ்விடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.
அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அந்த வீட்டிற்கு முன்னால் காவல்துறை தடுப்பு போட்டு விசாரணை மேற்கொண்டதாக ஷின்மின் நாளிதழின் செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த வீட்டில் குறைந்தது மூன்று காவல்துறை அதிகாரிகள் இருந்ததாக அறியப்படுகிறது.
வீட்டில் பல பொருள்கள் குவிந்து கிடந்ததாகவும் அதனால் அங்கு நடக்கவே சிரமமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆடவரின் மரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.