தன்னிடம் வேலைபார்த்த ஊழியரைக் காணவில்லை எனப் பல நாள்களாகத் தேடிவந்தார் முதலாளி.
இறுதியில், அந்த ஊழியரின் சடலத்தை அழுகிய நிலையில் கண்டுபிடித்தார் அவர்.
மண்டாய் ஃபுட்லிங்க் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்த சரக்குக் கொள்கலன் ஒன்றில் 30 வயதுடைய அந்த ஆடவரின் உடல் மே 22ஆம் தேதி காலை கண்டுபிடிக்கப்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.
தொழிற்பேட்டைக் கட்டடமான அவ்விடத்தில், பல காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை வாசகர் ஒருவர் பார்த்துவிட்டு செய்தி நிறுவனத்துக்குத் தகவல் கூறியிருந்தார்.
சரக்குக் கொள்கலனின் கதவைத் திறந்தபோது அழுகிய துர்நாற்றம் பலமாக வீசியதாகக் கூறப்படுகிறது.
துணிமணி உள்பட பலதரப்பட்ட ஆதாரங்களைக் காவல்துறை அதிகாரிகள் அந்தக் கொள்கலனிலிருந்து சேகரிப்பதைக் காண முடிந்தது.
இயற்கைக்கு மாறான மரணம் என்று இச்சம்பவத்தைக் காவல்துறையினர் வகைப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, மாண்டுகிடந்த அந்த ஆடவர், மதுபானப் பொருள்கள் சார்ந்த வர்த்தகத்தின் ஊழியர் என்று அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தகத்தை நடுத்தர வயதுடைய தம்பதியர் நடத்திவந்ததாக நம்பப்படுகிறது.
உயிரிழந்த ஆடவர் அந்தத் தம்பதியிடம் வேலைக்குச் சேர்ந்து சுமார் ஓராண்டு காலம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊழியரின் உடலைக் கண்டுபிடித்த முதலாளி, சிவந்த கண்களுடன் காணப்பட்டார்.
ஊழியரைப் பல நாள்களாகத் தொடர்புகொள்ள முயன்று இறுதியில் கொள்கலனைத் திறந்தபோது அழுகிய நிலையில் அந்த ஊழியரைப் பார்த்ததில் அவர் அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.

