கெப்பல் பேவில் உள்ள நீர்ப்பகுதியில் 50 வயது ஆடவரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திலேயே அவரது மரணத்தை உறுதிசெய்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணிக்கு, 2, கெப்பல் பே விஸ்தாவிலிருந்து உதவி கேட்டு தங்களுக்கு அழைப்பு வந்ததாய்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணைக்குப்பின், சந்தேகப்படும்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.
அந்த ஆடவர், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகு ஒன்றின் பணியாளர் என்று ‘மரினா அட் கெப்பல் பே’ பேச்சாளர் கூறினார்.
காவல்துறை விசாரணையைச் சுட்டிய அவர், மேல்விவரங்களைக் கொடுக்கவில்லை.
விவோசிட்டிக்கு அருகில் கெப்பல் தீவில் அமைந்துள்ள ‘மரினா அட் கெப்பல் பே’, அனைத்துலக சொகுசுப் பாய்மரப்படகுகள் நிறுத்தப்படும் இடமாக விளங்குவதாக கெப்பல் இணையத்தளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டது. அங்குச் சில உணவகங்கள் உள்ளன. அங்குப் பாய்மரப்படகு வாடகைச் சேவைகளும் வழங்கப்படுகின்றன.


