தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுபோதையில் இருந்த பெண்ணைச் சீரழித்தவர் மீதான குற்றம் நிரூபணம்

3 mins read
பெண்ணைப் பின்தொடர்ந்து, காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவு கொண்டார்
06dc1a8b-9f55-4e2e-bc50-2bffe3f3596e
பாதிக்கப்பட்ட பெண்ணின் படுக்கையறையில் என்ன நடந்தது என்பது குறித்து தனபாலன் ஃபோக் ஜின் ஜின் முரண்பட்ட தகவல்களை அளித்ததாக நீதிபதி கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மதுபோதையில் இருந்த பெண்ணை ஒரு மணிநேரம் பின்தொடர்ந்து சென்று, அவரைக் காரில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரது கூட்டுரிமைக் குடியிருப்பில் பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆடவர் ஒருவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

42 வயது தனபாலன் ஃபோக் ஜின் ஜின், 2021ல் நடந்த சம்பவத்தின்போது 33 வயதாக இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் தாம் பாலியல் உறவு கொண்டதாக வாதிட்டார்.

ஆனால், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வெலரி தியென், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தோழிக்காக ஃபோக் ‘மறைந்திருந்து காத்திருந்ததாக’ கூறினார்.

சம்பவம் முழுவதும் ஃபோக்குடன் இருந்த அவருடைய நண்பர் லீ கிட், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக சாட்சியமளித்தார். அதே பெண்ணை தாம் மானபங்கத்துக்கு உள்ளாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட லீக்கு, 2024 மார்ச்சில் 20 மாதச் சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண் மதுபோதையில் இருந்ததால், சம்மதம் அளிக்கும் நிலையில் அவர் இல்லை என்றும் ஃபோக்குடன் பாலியல் உறவுகொள்ள அவர் சம்மதிக்கவில்லை என்றும் நீதிபதி தியென் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் படுக்கையறையில் என்ன நடந்தது என்பது குறித்து ஃபோக் முரண்பட்ட தகவல்களை அளித்ததாகவும் நீதிபதி கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதை முதலில் ஃபோக் மறுத்தார். ஆனால், கார் கேமராவில் பதிவான அவரது உரையாடலைக் கொண்டு காவல்துறை விசாரணை செய்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

தம் மனைவிக்குத் தெரிந்துவிடும் என்று பயந்ததால், பாலியல் உறவு கொண்டதை தாம் முதலில் மறுத்ததாக ஃபோக் கூறினார். ஆனால், அவரது பொய் குற்றவுணர்வை வெளிப்படுத்துவதாகக் கூறி, இந்த விளக்கத்தை நீதிபதி நிராகரித்தார்.

2021 ஜனவரி 30ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ஆறு நண்பர்களுடன் டெம்ப்சி ஹில்லில் உள்ள ஓர் உணவகத்தில் தமது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன் பிறகு, அவர்கள் ஹாலந்து வில்லேஜில் உள்ள ஒரு மதுபானக்கூடத்துக்குச் சென்றனர்.

மதுபானக்கூடம் மூடப்பட்ட பின்னர், அனைவரும் தங்களது வீட்டுக்குச் சென்று விருந்தைத் தொடர முடிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய தோழியும் ஒரு தனியார் வாடகை காருக்கு முன்பதிவு செய்ய முடியாமல் திணறினர். சில வாடகை கார் ஓட்டுநர்கள் அவர்களை ஏற்ற மறுத்ததால், அவ்விருவரும் வீடு திரும்ப இயலாமல் தவித்தனர்.

அப்போது ஃபோக்கும் லீயும் அவர்களை அணுகி, வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர். வேறு வழியின்றி, பாதிக்கப்பட்ட பெண் அதை ஏற்றுக்கொண்டார்.

காரில் சென்றபோது இரண்டு பெண்களும் வாந்தி எடுத்துவிட்டு, பின்னிருக்கையில் தூங்கிவிட்டனர். கூட்டுரிமைக் குடியிருப்பைச் சென்றடைந்ததும், பாதிக்கப்பட்ட பெண் தமது நுழைவு அட்டையைத் (access card) தேடினார். லீ அந்த அட்டையைப் பயன்படுத்தி வாயிலைத் திறந்தார்.

பின்னர் அப்பெண்ணின் வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், ஃபோக் அவருடன் பாலியல் உறவு கொண்டதும் லீ பாலியல் செயல் செய்ததும் மறுக்கப்படவில்லை. அதே படுக்கையில் படுத்திருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை விட்டு இரு ஆடவர்களும் ஃபோக்கின் காரில் வெளியேறிய பிறகு, காவல்துறையிடம் மாட்டிக்கொள்வோமோ என்று கவலையுற்றனர். அப்போதுதான், தமது கைப்பேசியை அப்பெண்ணின் வீட்டில் விட்டுவிட்டு வந்தது ஃபோக்குக்குத் தெரிந்தது.

அப்பெண்ணின் வீட்டுக்குத் திரும்பி, கைப்பேசியைத் தருமாறு அவரை ஃபோக்கும் லீயும் வற்புறுத்தினர். அப்பெண் காவல்துறையை அழைத்ததைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்