புக்கிட் தீமாவில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஆடவர் ஒருவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறையினர், அன்று இரவு 7.25 மணியளவில் புக்கிட் தீமா கால்வாயிலிருந்து உதவி கேட்டுத் தங்களுக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்தனர்.
வாயாங் சத்து மேம்பாலம் அருகே நடந்த அந்த மீட்புச் சம்பவம் குறித்து இரவு 7.45 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது, காவல்துறையால் அடையாளங்காணப்பட்ட 57 வயது ஆடவர் ஒருவர், கால்வாயில் சுயநினைவிழந்த நிலையில் மிதந்துகொண்டிருப்பதைக் கண்டனர்.
குடிமைத் தற்காப்புப் படையின் மீட்புக் குழுவினர் ஏணியைப் பயன்படுத்தி கால்வாய்க்குள் இறங்கி அவரை வெளியே கொண்டுவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவர் சுயநினைவிழந்த நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர், அங்கு அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சதிச்செயல் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
விசாரணை தொடர்கிறது.


