கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை சிங்கப்பூர் எங்கும் உள்ள பல்வேறு பேரங்காடிகள், மருந்துக்கடைகள் ஆகியவற்றிலிருந்து குறைந்தது $1,723 பெறுமானமுள்ள பெனடால் மாத்திரைகளைத் திருடிய குற்றத்துக்காக 77 வயது முதியவருக்கு 24 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட ஆறு திருட்டுக் குற்றச்சாட்டுகளை லிம் சூன் ஹுவாட் ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பளிக்கப்பட்டபோது மேலும் 13 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
கடனை அடைக்க மாத்திரைகளைத் திருடியதாக லிம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தமது நண்பர்களுக்கும் சில மாத்திரைகளைத் தந்ததாக அவர் கூறினார். பேரங்காடிகளிலிருந்தும் மருந்துக்கடைகளிலிருந்தும் லிம் பெனடால் பொட்டலங்களைத் திருடினார்.
அவர் கைவரிசை காட்டிய இடங்களில் சன் பிளாசாவில் உள்ள வாட்சன் கடை, ஈஸ்ட்பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள கார்டியன் கடை, தாம்சன் பிளாசாவில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடி ஆகியவை அடங்கும்.
கடைகளில் அடுக்கிவைக்கப்பட்ட பெனடால் பொட்டலங்களைத் தமது காற்சட்டைப் பைகளில் அல்லது அவர் கொண்டு சென்ற பைகளில் திணித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், $394 பெறுமானமுள்ள பெனடால் மாத்திரைகளைக் காணவில்லை என்று கடந்த நவம்பர் மாதம், அங்கர்பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள வாட்சன் கடையின் மேலாளர் கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் புகார் செய்ததை அடுத்து, கண்காணிப்பு கேமரா மூலம் லிம் அடையாளம் காணப்பட்டார்.
கடந்த மாதம் 15ஆம் தேதியன்று லிம் கைது செய்யப்பட்டார்.
1980களிலும் இதேபோன்ற குற்றங்களை லிம் புரிந்து அதற்கான தண்டனைகள் அவருக்கு விதிக்கப்பட்டதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.
லிம்முக்குச் சீர்திருத்தப் பயிற்சி இருமுறை விதிக்கப்பட்டும் அவர் திருந்தாமல் தொடர்ந்து திருடியதை மாவட்ட நீதிபதி சுட்டினார்.

