புதிய மனைவியின் கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக 58 வயது ஆடவர் ஒருவருக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
ஓங் பீ ஹுவா எனப்படும் அவர் தம்மைவிட 23 வயது இளமையான வியட்னாமியப் பெண்ணை மதுபானக் கூடம் ஒன்றில் 2019ஆம் ஆண்டு சந்தித்தார்.
அந்தக் கூடத்தில் வேலை செய்த அந்தப் பெண்ணுடன் அவர் காதல் கொண்டார். இருவரும் உல்லாசமாகச் சுற்றித் திரிந்த பின்னர் 2023 ஜூன் மாதம் சிங்கப்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.
மகிழ்ச்சியாகச் செல்ல வேண்டிய அவர்களின் வாழ்க்கை தொடங்கிய வேகத்திலேயே கசந்தது.
டு தி இங்கான், 35, எனப்படும் தமது மனைவி இரவுநேரத்தில் அடிக்கடி வெளியே சென்றதால் சந்தேகம் அடைந்த ஓங் அவருடன் தகராறு செய்தார்.
அதனால், ஒரே மாதத்தில் வீட்டைவிட்டு அந்தப் பெண் வெளியேறிவிட்டார்.
சில மாதங்கள் கழித்து, அக்டோபர் 16ஆம் தேதி இரவு மது அருந்தச் சென்ற ஓங், அதே மதுபானக் கூடத்தில் தமது மனைவி வேலை செய்ததைக் காணொளியாகப் படம் எடுத்தார்.
குறுகியகால விசாவில் தங்கியுள்ள அந்தப் பெண் மதுபானக் கூடத்தில் சட்டவிரோதமாக வேலை செய்வதாக மனிதவள அமைச்சிடம் புகார் செய்யும் எண்ணத்தில் அவர் படம் எடுத்ததாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதனை அந்தப் பெண் எதிர்த்ததால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அந்தப் பெண்ணின் கன்னத்தில் பளார் பளார் என்று அவர் பலமுறை அறைந்ததோடு தலைமுடியையும் பிடித்து இழுத்தார்.
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக ஓங்கிற்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

