தொடர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனும் சந்தேகத்தின் பேரில் 57 வயது ஆடவர் ஒருவர் டிசம்பர் 4ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
ஓல்டு ஏர்போர்ட் ரோடு உணவங்காடி நிலையத்திலிருக்கும் உணவகம் ஒன்றில் $20 களவுபோனதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் பிடோக் காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு சந்தேக நபரை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
அவரைக் கைதுசெய்த காவல்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டது.
முதற்கட்ட விசாரணையின்படி சந்தேக நபருக்கு இதேபோன்று பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்பிருக்கலாம் எனக் காவல்துறை நம்புகிறது.
டிசம்பர் 6ஆம் தேதி சந்தேகப் பேர்வழிமீது குடியிருப்பில் திருடியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

