சரக்குகளை இறக்கிவைக்க முன்னுரிமை: கையூட்டு வாங்கிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

சரக்குகளை இறக்கிவைக்க முன்னுரிமை: கையூட்டு வாங்கிய ஆடவர்மீது குற்றச்சாட்டு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 May 2026 - 4:35 pm

1 mins read

கெப்பல் கிடங்கில் சரக்குகளை இறக்கிவைக்க முன்னுரிமை அளிப்பதற்குக் கையூட்டு வாங்கியதாக நம்பப்படும் 56 வயது ஆடவர்மீது வியாழக்கிழமை (மே 14) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கெப்பல் டிஸ்ட்ரிபார்க்கில் உள்ள ஹப் சூன் சியோங் நிறுவனத்தில் பூச்சிகருப்பையா தமிழ்செல்வன் ஃபோர்க்லிஃப்ட் ஓட்டுநராகப் பணியாற்றினார்.

அவர், ஐலண்ட்வாய்ட் டிரக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநரான 38 வயது சுரே‌ஷ் நாகராஜிடமிருந்து கையூட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

டிஸ்ட்ரிபார்க்கில் உள்ள கிடங்கில் சுரே‌ஷின் லாரியில் உள்ள சரக்குகளை முதலில் இறக்குவதற்கு முன்னுரிமை அளிக்கும்படி பூச்சிகருப்பையாவுக்குக் கையூட்டு வழங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்தபோது கிடங்கில் சரக்குகளை இறக்கிவைக்க பிற லாரிகள் வரிசையில் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.

சுரே‌ஷிடமிருந்து பூச்சிக்கருப்பையா இரண்டு முறை என மொத்தம் $170 கையூட்டு வாங்கிய குற்றத்தை எதிர்கொள்கிறார். அவருக்குக் கையூட்டு வழங்கியதாக சுரே‌ஷ்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இருவரின் வழக்கு விசாரணையும் ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கையூட்டு தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஐந்தாண்டுவரை சிறைத் தண்டனை, அதிகபட்சம் $100,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
சரக்குகிடங்குகையூட்டுகுற்றச்சாட்டு