சிங்கப்பூரில் பாலியல் தொழில் செய்யும்படி 10 பெண்களை அழைத்துவந்த ஆடவர்மீது நீதிமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 18) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட 40 வயது பிலிப் ஓங்க சிஹெ, தாய்லாந்துக்குத் தப்பியோடியதாகவும் கூறப்பட்டது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை ஓங், அந்தப் பெண்களைக் கேலாங்கிலும் பேலஸ்டியரில் உள்ள மின்பு சாலையிலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் சுட்டின.
பெண்களின் அடையாளங்களை மறைக்கும்படி பாதுகாப்பு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, தீவெங்கும் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதப் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்காகக் கைதுசெய்யப்பட்ட 17 பேரில் ஓங்கும் ஒருவர்.
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து ஓங் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஓங்கின் கடப்பிதழும் பறிமுதல் செய்யப்பட்டது.
2024, டிசம்பர் 12ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரும்படியான உத்தரவை ஓங் மீறியதை அடுத்து அவரைக் கைது செய்யும்படி கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
விசாரணையின்போது ஓங் சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரிலிருந்து தப்பியோடியிருப்பது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் குற்ற விசாரணைப் பிரிவின் முயற்சியாலும் தாய்லாந்துக் காவல்துறையின் உதவியாலும் தாய்லாந்தின் சொன்புரியில் ஓங் பிடிபட்டார்.
தாய்லாந்தில் இருந்தவாறு சிங்கப்பூரில் சட்டவிரோத நடவடிக்கைகளை ஓங் செயல்படுத்தியதாகப் பின்னர் தெரியவந்தது.
ஓங்கின் வழக்கு மார்ச் 25ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.
பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி வாழ்வோருக்கு அதிகபட்சம் ஏழாண்டு சிறைத் தண்டனையும் $100,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.

