சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் இரண்டு ஆடவரைக் கடத்த முயன்ற வாகன உரிமம் இல்லாத ஓட்டுநர் ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியரான அந்த 20 வயது ஓட்டுநர் அவர் வாங்கியிருந்த கடனைக் கட்டுவதற்காகச் சக நாட்டவர் இருவரைச் சட்டவிரோதமாகக் காரின் பின்புறம் வைத்துக் கடத்த ஒப்புக்கொண்டார்.
முகம்மது இஸ்ஸுல் இஸ்லாம் அப்துல் ஹக் எனும் அந்த ஓட்டுநருக்கு 10 மாதம், நான்கு வாரச் சிறைத்தண்டனையோடு $800 அபராதமும் விதிக்கப்பட்டது.
குடிநுழைவு, போக்குவரத்துக் குற்றங்கள் புரிந்ததை அவர் ஒப்புக்கொண்டார். இஸ்ஸுல் அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு நாள் கூடுதலாகச் சிறையில் இருக்கவேண்டும்.
விடுதலையான நாளிலிருந்து சிங்கப்பூரில் எந்த வகையான மோட்டார்வாகனத்தையும் அவர் ஈராண்டுக்கு ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரில் கடத்தப்பட்ட 30 வயது முகம்மது அஸியராஃப் முகம்மது ஸைனியும் 31 வயது முகம்மது இட்ஸுன் ஷஃபி மௌலா அப்துல் ரஸாக்கும் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் ஏற்கெனவே கையாண்டது. இருவரும் புரிந்த குற்றங்களின் விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.
ஃபேஸ்புக்கில் ஓராண்டுக்கு முன்னர் “கே” (K) என்று குறிப்பிடப்பட்டிருந்த ஒருவரின் வேலை விளம்பரத்தில் இஸ்ஸுல் கருத்துப் பதிவிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குச் சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதற்கான வேலை அது என்று நீதிமன்றத்திற்குத் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ஸில் அதில் சேர்ந்தார். மலேசியாவிற்குள் கடத்தப்படும் ஒவ்வொருவருக்கும் 500 ரிங்கிட் ($150) தருவதாக உறுதிகூறப்பட்டது.
இந்த ஆண்டு (2025) ஜூலை 4 அன்று, இஸ்ஸுலைத் தொடர்புகொண்டார் கே. சிங்கப்பூரிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக அஸியராஃபையும் இட்ஸுனையும் கடத்தும் வேலை கொடுக்கப்பட்டது.
கே அன்று இரவு 9 மணிக்கு இஸ்ஸுலுக்கு வாடகை காரைக் கொடுத்தார். இஸ்ஸுலிடம் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லை.
உட்லண்ட்சில் கனரக வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தில் இஸ்ஸுலை முன்பின் தெரியாத ஆடவர் ஒருவர் அணுகினார். அஸியராஃபையும் இட்ஸுனையும் காரின் பின்புறத்தில் ஒளிந்துகொள்ளுமாறு அந்த ஆடவர் சொன்னார்.
இஸ்ஸுல் அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு முன்பு உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை அடைந்தார். அங்கு மலேசியர்கள் மூவரையும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கைதுசெய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.