‘வூ‌‌ஷூ’ பெயரில் இளம் பெண்ணிடம் பாலியல் குற்றங்கள் புரிந்தவருக்குச் சிறை

2 mins read
061d1fe9-f44d-48e2-8554-3c05ef02017d
டான் பெங் குவீ - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனத் தற்காப்புக் கலையான ‘வூ‌ஷூ’வைக் கற்றுத்தருவதாகச் சொல்லிப் பதின்ம வயதுப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் ஒருவருக்கு ஒன்பது ஆண்டு நான்கு மாதச் சிறைத்தண்டனை புதன்கிழமை (டிசம்பர் 31) விதிக்கப்பட்டுள்ளது.

டான் பெங் குவீ எனும் அந்த 63 வயது ஆடவர், பாதிக்கப்பட்டவருக்கு எதிராகப் பாலியல் குற்றங்கள் புரிந்தது நிரூபிக்கப்பட்டது. குற்றங்கள் நடந்தபோது பெண்ணின் வயது 14க்கும் 15க்கும் இடைப்பட்டிருந்தது.

16 வயதுக்குட்பட்ட சிறியவரிடம் பாலியல் வன்முறையில் முயன்றது, வல்லுறவு கொண்டது, அநாகரிகமான முறையில் பாலியல் சேவை பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகள் டான் மீது சுமத்தப்பட்டிருந்தன. டான் வழக்கு விசாரணை கோரியிருந்தார். மூன்று குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார் முதன்மை மாவட்ட நீதிபதி டோ ஹான் லி. குற்றச்சாட்டுகளை டான் மறுத்ததை நீதிபதி நிராகரித்தார்.

நீதிமன்ற ஆணையின் காரணமாகப் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட முடியாது.

2007ஆம் ஆண்டு அங் மோ கியோ இல்லக் கோயிலை நிறுவினார் டான். அங்கு அவரின் அப்போதைய தோழியுடன் வசித்துவந்தார்.

கோயில் உறுப்பினர்களுடன் இருக்கும் கூட்டங்களின்போது தாவோயிசக் கடவுளை வரவேற்று அவரை ஆட்கொள்ளும்படி கேட்டதாகத் தெரிகிறது.

அத்தகைய ஒரு கூட்டத்தில், வூ‌‌ஷூ தற்காப்புக் கலையைத் தன்னிடமிருந்து கற்கும்படி பாதிக்கப்பட்டவரிடம் கூறியிருக்கிறார்.

2013ல் அந்தப் பதின்ம வயதுப் பெண்ணுக்கு மட்டும் வாரத்திற்கு இருமுறை வகுப்பை நடத்தியிருக்கிறார் டான். வேறு யாரும் இருக்கக்கூடாது என்பதையும் டான் உறுதிசெய்ததாகத் தெரிகிறது.

முதல் சில வகுப்புகளில் பாலியல் வன்கொடுமைகள் புரியப்பட்டன.

அந்தப் பெண் ஒத்துழைக்காவிட்டால் அவரும் அவருடைய குடும்பத்தாரும் தண்டிக்கப்படுவர் என்று டான் சொல்லியிருக்கிறார். சம்பவம் பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்றும் அதை மீறிச் சொன்னால், குடும்பத்துக்கு ஏதாவது நடந்துவிடும் என்றும் டான் கூறியிருக்கிறார்.

பெண், தாவோயிசக் கடவுள் தண்டித்துவிடுமோ என்ற அச்சத்தில் வகுப்புகளைத் தொடர்ந்தார். வகுப்புகள் 2015ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதிக்குச் சில வாரங்களுக்கு முன்பு வரை தொடர்ந்தன. அந்தரங்க உடலுறுப்புகளைப் போன்ற பொருள்களையும் பாதிக்கப்பட்டவரிடம் டான் காட்டியதாகக் கூறப்பட்டது.

2021ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி, காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். இரண்டு நாள்களுக்குப் பிறகு, டான் கைதுசெய்யப்பட்டார்.

நீதிபதி டோ தீர்ப்பை வாசித்தபோது, பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையை டான் மிகவும் தவறாய்ப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தார். அவர், டானை அப்பாவைப் போல் பார்த்ததாகவும் ஆன்மிகப் பாதைக்கு வழிகாட்டுவார் என்று நினைத்ததாகவும் நீதிபதி சொன்னார்.

சம்பவங்களின் தாக்கத்தால், பாதிக்கப்பட்டவருக்குப் பெரிய அளவில் மனச்சோர்வுப் பிரச்சினையும் அச்சமும் ஏற்பட்டதாக நீதிபதி டோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்