கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி சிங்கப்பூருக்கு எஃப் 1 கார் பந்தயத்தைக் காணவந்த சுவீடனைச் சேர்ந்த ஆடவர் இரண்டுநாள்கள் கழித்து மானபங்கக் குற்றங்களைப் புரிந்துள்ளார்.
அவருக்கு மொத்தம் ஐந்து மாதம் ஆறு வாரச் சிறைத்தண்டனையை திங்கட்கிழமை (மார்ச் 16) நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது. ஒரே நாளில் அவர் இரு பெண்களை மானபங்கப்படுத்தியுள்ளார்.
ஜென் ரோஜர் மட்டாயஸ் டிட்லோஃப்சன் என்ற 58 வயது ஆடவர் மூன்று மாதர்களை மானபங்கம் செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
கார்பந்தயம் முடிந்த இரண்டாம் நாள் மது அருந்திவிட்டு, அவர் ஒரு ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள உணவகத்தில் பணியில் இருந்த 47 வயது மாதிடம் நீச்சல் குளத்திற்கு வழிகேட்டுள்ளார்.
அந்த மாது வழிகாட்டிய பிறகு, அவரது கன்னத்தில் முத்தமிட்டிருக்கிறார். சம்பவம் குறித்து அந்த மாது மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். அதே ஹோட்டலில் உணவகத்தில் பணியில் இருந்த மற்றொரு 60 வயது மாதைக் கடந்து சென்றபோது ஆடவர் அவரை மானபங்கம் செய்துள்ளார். காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ஆடவர் அன்றே கைது செய்யப்பட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்டு அவர் வேறு ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தபோது அங்கு பணியில் இருந்த 23 வயதுப் பெண்ணின் கையைக் குலுக்கும்போது அக்கையில் முத்தமிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள், சம்பவம் நடந்த உணவகம், ஆடவர் தங்கியிருந்த ஹோட்டல் போன்ற விவரங்கள் அனைத்தும் நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை.

