சிங்கப்பூரில் விரைவாகப் பணம் ஈட்ட போலி இயக்குநராக ஆள்மாறாட்டம் செய்ய ஒப்புக்கொண்ட ஆடவருக்கு ஈராண்டு, மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டான் இயூ சின் என்ற 24 வயது ஆடவர் பல்வேறு போலி நிறுவனங்களின் இயக்குநராகத் தம்மைக் காட்டிக்கொள்ள ஒப்புக்கொண்டார். அத்தகைய போலி நிறுவனங்களில் ஒன்று கிட்டத்தட்ட $1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மோசடித் தொகையை அதன் வங்கிக் கணக்கில் போட்டது.
மற்றொரு நிறுவனத்துக்கு $7 மில்லியன் டாலருக்கும் அதிகமான மோசடித் தொகையை வங்கியில் செலுத்தவும் டான் முயன்றார்.
டான் இயக்குநராகக் காட்டிக்கொள்ள சம்மதித்த அக்கோர்ட் டெக்னாலஜி, ஹுவாசாங் டிரேடிங் ஆகிய இரண்டு நிறுவனங்கள் போலியானவை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
டான் நவம்பர் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் பணமோசடி தொடர்பான குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
2021ஆம் ஆண்டு மே மாதம் டெலிகிராம் தளத்தில் வந்த வேலை விளம்பரத்தை டான் அணுகினார்.
அதையடுத்து, லெரெக்ஸ் என்று அழைக்கப்பட்ட நபருடன் டான் தொடர்பில் வந்தார். வெளிநாட்டிலிருந்தவாறு சிங்கப்பூரில் வணிகம் செய்ய விரும்புவோருக்கு நியமன இயக்குநராகப் பணியாற்ற $5,000 வழங்கப்படும் என்று டானிடம் கூறப்பட்டது.
கூடுதல் விவரங்களைச் சரிபார்க்காமல் டான் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு அடையாள அட்டை எண், முழுப் பெயர் போன்ற தனிப்பட்ட விவரங்களை லெரெக்ஸ் என்ற சந்தேக நபரிடம் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி, டான் அக்கோர்ட் டெக்னாலஜி உள்பட இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
நியமன இயக்குநராக இருக்க ஒப்புக்கொண்டதற்காகவும் டானுக்கு $5,000 பணம் கொடுக்கப்பட்டது.
நேரில் பார்த்திராத லெரெக்ஸ் தமது பெயரில் அக்கோர்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் சார்பில் இரண்டு வர்த்தக வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும் அனுமதித்தார்.
அத்துடன், வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதற்குத் தேவையான இணைப்புகளையும் டான் லெரெக்ஸிடம் கொடுத்தார்.
பின் அமெரிக்காவிலிருந்து $1 மில்லியன் தொகை டானின் பெயரில் திறக்கப்பட்ட அக்கோர்ட் டெக்னாலஜி வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது.

