இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 34 வயது தேவன் முகத்தில் 27 வயது முகமது அமிருடின் சப்து குத்தினார்.
இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த தேவன் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு வாரத்திற்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
279 பாலஸ்டியர் ரோட்டில் கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி, நடந்த அச்சம்பவத்தில் தொடர்புடைய முகம்மது அமிருடினுக்குத் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 13) 36 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், ஈராண்டுகளுக்கு அனைத்து வகையான வாகனமோட்டும் உரிமங்களை வைத்திருப்பதற்கும் வாகனமோட்டுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஒருவருக்கு மரணம் ஏற்படும் வகையில் காயத்தை வேண்டுமென்றே விளைவித்தது, தகுந்த ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டியது, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை அமிருடின் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.