போலியான நன்கொடை திரட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட ஆடவருக்கு அண்மையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த ஆடவர் இனி அறக்கட்டளை சார்ந்த நன்கொடைகளைத் திரட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
லிம் கா கெங் என்னும் 42 வயது ஆடவர் நன்கொடை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று அறக்கட்டளைகளுக்கான ஆணையர் டெஸ்மண்ட் சின் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) உத்தரவிட்டார்.
லிம் செய்த நன்கொடை மோசடிக்கு அவருக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
லிம் செய்த போலி நன்கொடை திரட்டு நடவடிக்கைகள்மூலம் 106,000 வெள்ளி திரட்டப்பட்டது. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2024 ஜூன் மாதம்வரை மோசடி செயலில் அவர் ஈடுபட்டார். 12,600க்கும் அதிகமானவர்கள் லிம்மின் மோசடியால் பாதிக்கப்பட்டனர்.
“ லிம், அறக்கட்டளை சார்ந்த நன்கொடை நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சரியானவர் அல்ல. அவரைத் தடை செய்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை,” என்று திரு சின், அறிக்கைமூலம் தகவல் வெளியிட்டார்.
பொதுமக்களின் நலன் கருதி, லிம் எந்தவொரு நிதி திரட்டிலும் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“அறக்கட்டளை சார்ந்த நன்கொடைகளை வழங்கும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். நன்கொடை திரட்டுபவரிடம் அனைத்து விவரங்களையும் கேட்க வேண்டும். நிதி சரியாகக் கையாளப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்,” என்றார் ஆணையர் சின்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பொதுமக்கள் போலியான நன்கொடை நடவடிக்கைகளை அடையாளம் கண்டால் mccy_charities@mccy.gov.sg என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் கொடுக்குமாறு திரு சின் கேட்டுக்கொண்டார்.

