வர்த்தக இடங்களின் கட்டட நிர்வாகியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, மொத்தமாக 61 ஒப்பந்ததாரர்களை கிட்டத்தட்ட $310,000 ஏமாற்றிய 40 வயது அறிவழகன் முத்துசாமிக்கு புதன்கிழமை (ஜூன் 4) இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட 62 மோசடிக் குற்றச்சாட்டுகளில் 21 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்படுமுன் அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.
ஏற்கெனவே புரிந்த குற்றத்திற்காகத் தண்டனைக் குறைப்பு உத்தரவின்கீழ் இருந்த அறிவழகன், விதியை மீறி அக்காலகட்டத்திலும் மீண்டும் குற்றம் புரிந்ததால் கூடுதலாக 80 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒப்பந்ததாரர்களைக் குறிவைத்து நடந்த மோசடிகள் குறித்து அறிந்த அவர் அவ்வழியைத் தானும் பின்பற்ற முடிவுசெய்தார்.
அதன்படி, சில ஒப்பந்ததாரர்களைத் தொடர்புகொண்டு குறிப்பிட்ட சில கட்டடங்களுக்குப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொய்யுரைத்தார்.
பின்னர், அக்கட்டடங்களின் நிர்வாகியாகத் தன்னை ஒப்பந்ததாரர்களிடம் அறிமுகப்படுத்திகொண்ட அறிவழகன், ஒப்பந்தம் பெற வைப்புத்தொகையாகக் குறிப்பிட்ட சில ரொக்கத்தை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
வேலைக்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட சில தொகையைச் செலுத்துமாறும் சில ஒப்பந்ததாரர்களிடம் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மோசடிகளில் ஈடுபட அவருக்குப் பல கைப்பேசி எண்களும் வங்கிக் கணக்குகளும் தேவைப்பட்டன. அதனால், இருவரைத் தமது ஏமாற்று வேலையில் இணைத்துகொண்டார்.
2022ஆம் ஆண்டு பிற்பாதியில் தொடங்கி 2023ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை பல ஒப்பந்ததாரர்களை அவர் ஏமாற்றினார்.
2023ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட அறிவழகன்மீது அதற்கு மறுநாள் குற்றம் சுமத்தப்பட்டது.

