செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி 4.6 மில்லியன் வெள்ளி மோசடி செய்த ஆடவருக்கு ஏழு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஓங் காய் மின் என்னும் அந்த 42 வயது சிங்கப்பூரர், எட்டு முதலீட்டாளர்கள், ஏழு நபர்கள், ஒரு நிறுவனத்தை ஏமாற்றியுள்ளார்.
தம்மீது சுமத்தப்பட்ட எட்டுக் குற்றச்சாட்டுகளையும் ஓங் ஒப்புக்கொண்டார்.
நிறுவனத்திடமிருந்து 689,000 வெள்ளியும் மற்ற நபர்களிடமிருந்து 3.39 மில்லியன் வெள்ளியையும் ஓங் ஏமாற்றியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஓங், 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை குற்றச் செயலில் ஈடுபட்டார். அப்போது எஸ்ஐடிஐ (SITI) என்னும் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.
தனது நிறுவனம் ‘ஏஐ’ தொழில்நுட்பம்மூலம் சில கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அதன் மூலம் பங்குப் பரிவர்த்தனையைத் தானாகச் செய்ய முடியும் என்றும் ஓங் முதலீட்டாளர்களை நம்பவைத்துள்ளார்.
பங்குப் பரிவர்த்தனையால் மாதம் 2 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை லாபம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஓங் எந்தப் பங்குப் பரிவர்த்தனையும் செய்யவில்லை. கிடைத்த நிதியைத் தனது சொந்தச் செலவுகளுக்கு அவர் பயன்படுத்திக்கொண்டார்.
முதலீடுகள் குறித்து சரியான பதில் வராததால் காவல்துறையில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். அதன்பின்னர் நடந்த விசாரணையில் ஓங் செய்த குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
ஓங்மீது இவ்வாண்டு ஜனவரி மாதம் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.