தன் முன்னாள் காதலி நிர்வாணமாக இருக்கும் படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய ஆடவருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனையும் $2,000 அபராதமும் செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.
தன் முன்னாள் காதலிமீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் மாந்திரீகத்தைப் பயன்படுத்திவிடுவேன் எனவும் அந்த 25 வயது ஆடவர் மிரட்டினார்.
அந்த ஆடவரைவிட்டுப் பிரிந்து வேறு ஒருவருடன் அந்த மாது தொடர்பில் இருந்ததால் அவர் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக அந்த ஆடவரின் பெயரை நீதிமன்ற உத்தரவின்படி வெளியிட முடியாது எனக் கூறப்பட்டது.
அந்தரங்கப் படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியது, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி துன்புறுத்தியது என்ற தன்மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனைக்குமுன் அவர்மீது சுமத்தப்பட்டிருந்த மற்ற ஆறு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.


