சக ஊழியருடைய காதின் ஒரு பகுதியைக் கடித்தெறிந்த 21 வயது செந்தில்குமார் விஷ்ணுசக்திக்கு வியாழக்கிழமை (ஜூலை 3) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
31 வயது திரு நேசமணி ஹரிஹரனுக்குப் படுகாயம் விளைவித்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
தமது காதின் ஒரு பகுதியை திரு நேசமணி நிரந்தரமாக இழந்தார்.
மதுபானம் அருந்திய பிறகு திரு நேசமணியுடன் செந்தில்குமார் சண்டை போட்டார்.
குடிபோதையில் இருந்த செந்தில்குமார், பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 7 மணி அளவில் காலாங்கில் உள்ள தமது தங்குவிடுதிக்குத் திரும்பினார். அங்கு அவர் திரு நேசமணி திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்ததைக் கவனித்தார்.
தம்மைத் திரு நேசமணி வேவு பார்ப்பதாகவும் வேலையில் தமது செயல்பாடு குறித்து தமது மேற்பார்வையாளரிடம் புகார் செய்வதாகவும் செந்தில்குமார் உரக்கக் கூறினார்.
திரு நேசமணியை ‘நாய்’ என்று செந்தில்குமார் அழைத்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த திரு நேசமணி செந்தில்குமாரை எதிர்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அதையடுத்து, திரு நேசமணியின் காதின் ஒரு பகுதியை செந்தில்குமார் கடித்தெறிந்தார்.
மற்ற ஊழியர்கள் செந்தில்குமாரைக் கட்டுப்படுத்தினர். காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
திரு நேசமணி டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு ஒன்பது நாள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி அவரது காயங்கள் ஆறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

