பொது இடத்தில் துப்பாக்கி எடுத்துச் சென்ற ஆடவருக்குச் சிறை, பிரம்படி

பொது இடத்தில் துப்பாக்கி எடுத்துச் சென்ற ஆடவருக்குச் சிறை, பிரம்படி

2 mins read
ஆடவருக்கு ஆறு ஆண்டுகள் ஆறு மாதம் இரண்டு வாரம் சிறை
9a4a047a-895d-4017-ae20-ea90557bd24c
ஹெங் ஜுன் ஹோ என்னும் அந்த 29 வயது ஆடவர் 2024ஆம் ஆண்டு மே மாதம் பூகிஸ்+ கடைத்தொகுதிக்குத் துப்பாக்கியுடன் சென்றுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துணை காவற்படை அதிகாரி ஒருவர் தனது வேலை நேரம் முடிந்து பொது இடத்தில் தோட்டாக்களுடன் உள்ள துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்தக் குற்றச் செயலுக்காக அவருக்கு ஆறு ஆண்டுகள் ஆறு மாதம் இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஆறு பிரம்படிகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹெங் ஜுன் ஹோ என்னும் அந்த 29 வயது ஆடவர் 2024ஆம் ஆண்டு மே மாதம் பூகிஸ்+ கடைத்தொகுதிக்குத் துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.

தனது சூதாட்டப் பழக்கத்தால் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் அதனால் உயிரை மாய்த்துக்கொள்ள துப்பாக்கியை எடுத்துச் சென்றதாகவும் ஹெங் விசாரணையில் தெரிவித்தார்.

தன்மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகளை ஹெங் ஒப்புக்கொண்டார்.

ஹெங் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் செர்டிஸ் நிறுவனத்தில் துணை காவற்படை அதிகாரியாகச் சேர்ந்தார். பின்னர் அவர் சாங்கி விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டார் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காதல் முறிவு காரணமாக மே 9ஆம் தேதி, ஹெங் தனது வேலையை முடித்த பிறகு இரவு 8 மணி வாக்கில் ஆயுதங்களை ஒப்படைக்காமல் அலுவலகத்திலிருந்து கிளம்பினார்.

அதன்பிறகு அவர் சிம் லிம் ஸ்குவேர் கடைத்தொகுதிக்குச் சென்றார். பின்னர் பூகிஸ்+ கடைத்தொகுதியில் படம் பார்க்கச் சென்றார்.

இரவு 8.45 மணிவாக்கில் ஹெங் துப்பாக்கியை ஒப்படைக்காதது அலுவலகத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து 100க்கும் அதிகமான அதிகாரிகள் ஹெங்கைத் தேடினர்.

மே 10ஆம் தேதி பின்னிரவு 12.20 மணிக்குப் படம் முடிந்து வெளியேவந்த ஹெங்கை அதிகாரி ஒருவர் அடையாளம் கண்டு கைது செய்தார். அதன்பின்னர் ஹெங் பணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்