நிறைவேற்றப்படாத விநியோகப் பணிகளுக்காக கிராப் டாக்சி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை ஏமாற்றி 18,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறித்த ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியான 30 வயது அலெக்ஸ் வாங் சியாங் யிக்கு வியாழக்கிழமை (மே 21) 13 மாதங்கள் 16 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏமாற்றியதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் உட்பட 14 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட வேறு குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.
மேலும் வாங்குக்கு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஈராண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கிராப் நிறுவனத்தை ஏமாற்றியதாக நால்வர்மீது சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்த ஏமாற்றுச் செயல்களால் அந்த நிறுவனத்துக்கு 58,000 வெள்ளிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாகக் காவல்துறை நவம்பரில் தெரிவித்தது.
5,540 மோசடிப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாங், இந்த விவகாரத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது நபராவார். கடந்த மார்ச் மாதம் ஸுல்கர்னாய்ன் முகம்மது, 35, ஏப்ரலில் லோ ஜிங் ஜியெ, 33, ஆகியோருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

