பலரை ஏமாற்றி பணம் பறித்த மலேசிய ஆடவருக்குச் சிறை

பலரை ஏமாற்றி பணம் பறித்த மலேசிய ஆடவருக்குச் சிறை

1 mins read
1c326c49-d557-4bae-92ea-5a015cc98d5a
gavel, auction, law - பிக்சாபே

இணையச் சூதாட்டத்தில் பெருந்தொகையை இழந்த ஆடவர் ஒருவர், தனக்குப் பணம் தேவைப்பட்டதால் மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கத் திட்டமிட்டார்.

ஃபூ ஜுன் காங், 29, என்ற அந்த ஆடவர், இணையம் வழியாக தான் விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை விற்பதாகக் கூறி, பத்துக்கும் மேற்பட்டோரை மோசடி செய்தார்.

அதன்மூலம் $156,000க்கும் அதிகமான பணத்தை அவர் சுருட்டினார்.

மலேசியரான ஃபூவிற்குப் புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) ஈராண்டுகளும் இரண்டு மாதங்களும் சிறைத்தண்டனையாக விதிக்கப்பட்டது.

இருவரை ஏமாற்றி, 91,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தைப் பறித்ததாகக் கூறி, தன்மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட இருவருக்கும் அவர் எந்தப் பணத்தையும் திருப்பித் தரவில்லை.

ஃபூவிற்குத் தண்டனை விதிக்கப்படும்போது அவர்மீதான மேலும் நான்கு குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.

கடந்த 2023 ஜூன் மாதம், ‘லிட்டில் ரெட் புக்’ என்ற இணையச் சந்தைத்தளம் வழியாக, பல்வேறு விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் விற்பனைக்கு உள்ளதாக ஃபூ பட்டியலிட்டார்.

பணத்தைப் பெற்றபின் கைக்கடிகாரத்தை வழங்காததால் அவர்மீது இருவர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

ஒவ்வோர் ஏமாற்றுக் குற்றத்திற்கும், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்