பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது நீண்ட தலைமுடி வைத்திருந்த பெண்ணைக் கண்டு பாலியல் ரீதியாக வயப்பட்ட ஆடவர் ஒருவர் அப்பெண்ணின் தலைமுடியை வெட்டினார்.
எட்வின் சோவ் ருய் சியாங் என்னும் அந்த 26 வயது ஆடவருக்கு இரண்டு மாதம் இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி எட்வின் டோவரில் 185 எண் கொண்ட பேருந்தில் ஏறினார். அப்போது நீண்ட தலைமுடி கொண்ட பெண்ணைக் கண்ட எட்வின் அப்பெண்ணுக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
பின்னிருக்கையில் இருந்தவாறு எட்வின் அப்பெண்ணின் தலைமுடியை வெட்டினார்.
தமது முடி வெட்டப்பட்டதை உணர்ந்த அப்பெண் எட்வினை விசாரித்தார். அதன்பின்னர் அப்பெண் பேருந்து ஓட்டுநரிடம் புகார் கொடுத்தார். அவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
அதன் பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் எட்வினை விசாரணை செய்தனர்.
எட்வினின் பையில் சில பெண்களின் முடிகளும் ஐந்து கத்தரிக்கோல்களும் இருந்தன.
வெட்டிய தலைமுடியை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்த எட்வின் வீட்டிற்குச் சென்று அதை மோந்து பார்க்கத் திட்டமிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி எட்வின் இரண்டு வெவ்வேறு பேருந்துகளில் இரண்டு பெண்களின் தலைமுடிகளை வெட்டியுள்ளார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எட்வின் ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 11) தண்டனை விதிக்கப்பட்டது.

