சிங்கப்பூரில் உள்ள இரண்டு நிறுவனங்களை ஏமாற்றிய முன்னாள் விற்பனை நிர்வாகிக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செனோ கூனிஹேடே என்ற 50 வயது ஆடவரால் இரண்டு நிறுவனங்களுக்கும் கிட்டத்தட்ட $726,000 இழப்பு ஏற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் சுட்டின.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல்வரை என்இசி ஏஷிய பசிபிக் என்ற நிறுவனத்தில் தொடர்புகள் தொழில்நுட்பச் சேவை வழங்குநராகப் பணியாற்றிய செனோ, மூன்றாவது நிறுவனம் ஒன்றை ஏமாற்றும் நோக்கில் போலி கையெழுத்திட்டார்.
அதன் மூலம் மேலும் $120,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டது.
செனோ என்ற சிங்கப்பூரர் ஏமாற்றம் தொடர்பில் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் போலி கையெழுத்திட்ட குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.
என்இசி நிறுவனம் அவசரமாக இரண்டு சேவையகத்தை (server) வாங்க விரும்புவதாகக் கூறியதை அடுத்து 2021ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி, மின்சாதனங்களை விநியோகம் செய்யும் ஜேஇபி இன்னோவேஷன்ஸ், டெக்னோலஜிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரின் அறிமுகம் செனோவுக்குக் கிடைத்தது.
என்இசி நிறுவனத்தின் சார்பில் செயல்படுவதாகக் கூறி, 2021ஆம் ஆண்டு ஜூலை 15 முதல் அக்டோபர் 9வரை ஆறுமுறை அந்த இரண்டு சேவையகங்கள் உட்பட பல சாதனங்களை விநியோகிக்கும்படி ஜேஇபி நிறுவனத்தை செனோ ஏமாற்றினார்.
அந்தச் சாதனங்கள் அவர் கொடுத்த முகவரிகளுக்கு அனுப்பப்பட்டன. அச்சாதனங்களின் மொத்த மதிப்பு $45,620 என்று தெரிகிறது.
அவை, சீனாவைத் தளமாகக் கொண்ட டாப்ஸ்டார் டெக்னாலஜி இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கு மறுவிற்பனை செய்ய செனோ திட்டமிட்டிருந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
தாம் மேற்கொண்ட மோசடியை மறைக்க என்இசி நிறுவனத்தின் முத்திரையும் கையெழுத்தும் கொண்ட பல ஆவணங்களும் செனோ பயன்படுத்தினார்.
இறுதியில் ஜேஇபி நிறுவனத்திடமிருந்து உத்தரவுக் கடிதம் வந்ததை அடுத்து செனோவின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.


