சிலேத்தார் மனமகிழ் மன்றத்தில் நீச்சல் குளத்திற்குள் தமது காரை இருமுறை ஓட்டிய ஆடவருக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்துவித வாகன உரிமங்களுக்கான பயன்பாட்டிலிருந்து அவர் மூன்று ஆண்டுகளுக்குத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
63 வயது வில்லியம் டெங் குவான் ஹாவ், தமது குற்றங்களை ஏப்ரல் 7ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கான தண்டனை இரண்டு நாள்கள் கழித்து விதிக்கப்பட்டது.
மதுபோதையில் காரை ஓட்டியதற்கும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்த முன்யோசனையற்ற செயலுக்கும் டெங் தண்டிக்கப்படுகிறார். சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய அளவுக்கு டெங்கின் குற்றங்கள் கடுமையாக இருப்பதாக வட்டார நீதிபதி கூ ஸீ சுவான் தெரிவித்தார்.
“சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள அளவை மீறிய மிக அதிக அளவிலான போதையில் அவர் இருந்தார். அந்நேரத்தில் அவர் காரை ஓட்டுவதற்குத் தகுதியற்றவராக இருந்தார். வாகனங்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் அவர் காரை ஓட்டினார். அவர் தன் காரை கிட்டத்தட்ட எட்டு நிமிடங்களுக்கு அங்குமிங்குமாக ஓட்டினார்,” என்று அவர் கூறினார்.
டெங், இதற்கு முன்னதாக 2016க்கும் 2017க்கும் இடையே பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

