வெளிநாட்டில் குற்றச்செயலில் ஈடுபட்டதன் மூலம் ஈட்டிய $1.5 பில்லியனுக்கும் அதிகமான பணத்தைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 28,000 தங்கக் கட்டிகளை வாங்கிய ஆடவருக்குப் புதன்கிழமையன்று (அக்டோபர் 1) ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தென்கொரியாவைச் சேர்ந்த கிம் தெய்க் ஹூன் என்ற அந்த 63 வயது ஆடவர், 23,500க்கும் மேலான தங்கக் கட்டிகளைத் தொழிலியல் கருவிகளுக்குள் மறைத்து, தனது சொந்த நாட்டிற்கும் ஜப்பானுக்கும் அனுப்பியதாகக் கூறப்பட்டது.
தளவாட நிறுவனங்களை ஏமாற்றியதாகச் சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் சிங்கப்பூர் சுங்கத்துறை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் கிம் நீதிமன்றத்தில் முன்னரே ஒப்புக்கொண்டார்.
மேலும், கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரம் சம்பந்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும் வெளிநாட்டிலிருந்து $20,000க்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தை வெளிப்படையாக அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் பெற்றதன் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.