பணத்திற்காக வங்கிக் கணக்கு விவரங்களை விற்க ஆள்சேர்க்கும் திட்டத்தில் தனக்கு அறிமுகமானவரை அதில் இணைத்தார் டான் மிங் சுவான்.
ஆனால், இந்த விவகாரம் அந்த அறிமுகமானவரின் தந்தைக்குத் தெரியவந்தது. அவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஏறக்குறைய S$25,700 தொகையைக் கொண்ட சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.
இத்திட்டத்தில் சேர்ந்த அந்த 25 வயது ஆடவரே பணத்தை எடுத்துக்கொண்டதாக எண்ணிய டானும் அவருடைய நண்பர்களும் அவரை எதிர்த்தனர். 1.5 லிட்டர் காலி போத்தலில் சிறுநீர் கழித்து, அதைக் குடிக்க வேண்டும், இல்லையென்றால் தங்களுடன் சண்டையிட வேண்டும் என்று அவர்கள் மிரட்டினர்.
வேறு வழியின்றி அந்த ஆடவர், போத்தலில் இருந்த சிறுநீரில் ஏறக்குறைய முக்கால் பங்கைக் குடித்ததோடு, மீதியை தமது தலையில் ஊற்றிக்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டார்.
இந்நிலையில், டானுக்கு நான்கு மாத, எட்டு வாரச் சிறைத் தண்டனையும் $300 அபராதமும் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) விதிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டையும் வங்கிக் கணக்கை அளித்தது தொடர்பாக கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். மூன்றாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.